"மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இருக்காது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட விளக்கம்!
No Caste Details on Student ID Cards QR System Under Review Minister Sengottaiyan
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி அடையாளங்கள் இணைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமரிசனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்தச் சூழலில், எழுந்துள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
டேட்டா சேகரிப்பின் உண்மையான நோக்கம்
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தத் திட்டத்தின் பின்னணி குறித்துப் பேசுகையில், "பள்ளிக்கல்வித் துறையும் வருவாய்த் துறையும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலனுக்காக ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருகிறோம். அதன்படி, க்யூஆர் கோடு (QR Code) தொழில்நுட்பம் மூலமாக மாணவர்களின் முகவரி, கல்வித் தகுதி, சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை விவரங்கள் அடங்கிய தரவுகளை (Data) ஒரே இடத்தில் கொண்டுவர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தரவுகளில் எக்காரணம் கொண்டும் சாதி அடிப்படையிலான விவரங்கள் இடம்பெறாது. பள்ளிகளில் மாணவர்களுக்குச் சாதி பேதம் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நமது அரசு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது" என்று தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகள்
தொடர்ந்து இந்த அடையாள அட்டையின் நன்மைகள் குறித்து விளக்கிய அமைச்சர், "மாணவர்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏதேனும் நேர்ந்தால், இந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள ரத்தப் பிரிவு (Blood Group), முகவரி மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றின் உதவியோடு அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும், வெளியூர் செல்லும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் பெற்றோரை உடனடியாகத் தொடர்புகொள்ளவும் இது ஏதுவாக இருக்கும். இதை மட்டும்தான் நாங்கள் செய்யப் போகிறோம். இதில் சாதிச் சான்றிதழ்களை இணைப்பதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை; எப்போதும் அப்படி இணைக்கப்படாது" என்று உறுதியளித்தார்.
கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாகத் துறையின் சார்பில் தடையின்றி நடந்து வருவதாகவும், அது வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
No Caste Details on Student ID Cards QR System Under Review Minister Sengottaiyan