மருத்துவச் சீட் ஆசை காட்டி மடிப்பாக்கம் பெண்ணிடம் ரூ.11 லட்சம் சுருட்டிய நெல்லை வாலிபர் கைது...!
Nellai Youth Arrested Swindling 11 Lakhs from Madipakkam Woman by Promising Medical Seat
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 43 வயது பெண்மணி அபர்ணா, தனது மகனின் மருத்துவக் கனவை நனவாக்க முயன்று, சமூக வலைதள மோசடியில் சிக்கி 11 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு முகநூல் வழியாக இவருக்கு அறிமுகமான நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ராம் கமல் (33), தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து அபர்ணாவை நம்ப வைத்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்து, அதற்காக முன்பணமாக 11 லட்சம் ரூபாயைச் சுருட்டியுள்ளார்.
கொடுத்த வாக்கின்படி மருத்துவச் சீட்டும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ராம் கமல் இழுத்தடித்ததால், ஏமாற்றமடைந்த அபர்ணா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
புகாரின் பேரில் களமிறங்கிய காவலர்கள், ராம் கமலைக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.
அந்த விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், ஒரு 'சீரியல்' மோசடி பேர்வழி என்பதும், ஏற்கனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இவர் மீது இதே போன்ற ஒரு மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
English Summary
Nellai Youth Arrested Swindling 11 Lakhs from Madipakkam Woman by Promising Medical Seat