தமிழ்நாட்டில் மின் கட்டணம் அதிகம்; கள ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு மின் வாரியத் தலைவர்..!
The Tamil Nadu Electricity Board Chairman has ordered a field investigation into the high electricity bills in Tamil Nadu
தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தில் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்துவிட்டு, மின் கட்டணத்தை அரசு அமைதியாக உயர்த்தியுள்ளதாக எதிர் கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்ததுள்ளது.
இந்நிலையில், மின் கட்டணம் அதிகரித்திருப்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் கடந்த 19-ஆம் தேதி விளக்கம் கொடுத்தார். அப்போது அவர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''மின்சார துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.

மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருந்து ஆரம்பத்திலேயே பிரச்சனையை பிரிவு அலுவலகம் கண்டறிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீடுகளுக்கு அதிகளவில் மின் கட்டணம் விதிப்பு குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் அருண்ராய், கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் அருண்ராய், அனைத்து தலைமை மின் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஜூலை மாதத்தில் அதிக மின் கட்டணம் வந்ததாக பரவலாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகளைக் கொண்டு மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
முந்தைய மே மாத கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலையில் அதிக வேறுபாடு உள்ள 3.70 இலட்சம் மின் இணைப்புகளுக்கு மறு ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த ஆய்வின் போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் தேவையான திருத்தங்கள் உடனுக்குடன் செய்யப்பட வேண்டும்''என தெரிவித்துள்ளார்.
English Summary
The Tamil Nadu Electricity Board Chairman has ordered a field investigation into the high electricity bills in Tamil Nadu