கொலைகளின் தலைநகர் நெல்லை.. 29 கொலைகள், நடுநடுங்கும் மக்கள்.. செய்தியை மறுத்த நெல்லை காவல்துறை! - Seithipunal
Seithipunal


இன்று (12.08.2025) ஒரு தனியார் தொலைக்காட்சி, "கொலைகளின் தலைநகர் நெல்லை 29 கொலைகள், நடுநடுங்கும் மக்கள்" எனும் செய்தியை வெளியிட்டுள்ளது. 

அந்தச் செய்தியில் கூறப்பட்ட தகவல்கள் தவறான கண்ணோட்டத்துடனும் மற்றும் பொது மக்களிடம் அச்சம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக நெல்லை காவல்துறை தரப்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், "நேற்று நாங்குநேரி காவல் சரகத்தில், இரு உடன் பிறந்த சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறின் தொடர்ச்சியாக ஒருவர் மற்றொருவரை தாக்கி கொலை செய்துள்ளார். இது முழுக்க, முழுக்க குடும்பத்தினருக்கிடையேயான தனிப்பட்ட பிரச்சனை மட்டுமே பொதுமக்களோ அல்லது அப்பகுதி மக்களோ பாதிக்கப்படவில்லை. 

எந்தவிதமான பொது அமைதி குலைவு சம்பவமும் ஏற்படவில்லை. இந்த கொலையை மேற்கோள் காட்டி, கடந்த எட்டு மாதங்களில் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் மொத்தம் 29 கொலைகள் நடந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு திருநெல்வேலி ஊரக மாவட்டத்தில், இதுவரை 18 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இக்கொலை வழக்குகளானது இதே காலகட்டத்தில், 2024-ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 10 சதவிகிதமும், 2023-ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 22 சதவிகிதமும், 2022 -ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 42 சதவிகிதமும் குறைவானதாகும். இதன்படி கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தில் இந்த ஆண்டில் இதுவரை 11 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு மாவட்டத்தில் பதிவான 18 கொலை வழக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சனைகளின் விளைவாகவே நிகழ்ந்தவை. அவற்றில் 6 வழக்குகள் வாய் தகராறு மற்றும் சிறு பிரச்சனைகள், 4 வழக்குகள் முறையற்ற அல்லது தகாத உறவு, 3 வழக்குகள் பணம் கொடுக்கல் வாங்கல், 2 வழக்குகள் சொத்து பிரச்சனை, 2 வழக்குகள் குடும்பத்தினருக்கிடையேயான பிரச்சனை மற்றும் 1 வழக்கு பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இதில் பழிவாங்கல், ரவுடி சம்பவங்கள் அல்லது சாதி சார்ந்த கொலைகள் எதுவும் இல்லை.

காவல்துறையின் சார்பில் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் 24 மணி நேர கண்காணிப்பு, முன்தகவலின் அடிப்படையில் தடுப்பு கைது, கிராமத்து காவல் திட்டம், தினசரி நடை ரோந்து, மக்களுடன் நல்லுறவு வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாவட்டத்தில் 9 மற்றும் மாநகரத்தில் 2 கொலை சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. சிறு பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் உடனடியாக போலீஸ் தலையீடு செய்து பெரிய பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரம் சமாதானமாகவும் கட்டுப்பாடுடனும் உள்ளது. பொதுமக்கள் அமைதியான சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், அந்த அமைதியை குலைக்கும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிடாமல், சமூக பொறுப்புடன் ஊடகங்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai Police Law and order


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->