'நீதித் துறைக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்'; வானதி சீனிவாசன் கண்டனம்..!
Vanathi Srinivasan condemns Chief Minister MK Stalin for publicly threatening the judiciary and the Constitution
இந்துக்களுக்கு அநீதி இழைத்து விட்டு, உரிமைக்காக போராடினால் அவர்களை வைத்து மலிவான அரசியல் என்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடுமையாக சாட்டியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல தன் ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம் போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான்’ என முதல்வர் கூறியிருக்கிறார்.

கார்த்திகை தீபத்தின்போது மலை உச்சியில்தான் தீபம் ஏற்றுவார்கள். திருவண்ணாமலையில் மலை உச்சியில்தான் தீபம் ஏற்றப்பட்டது. அப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் முருக பக்தர்களின் கோரிக்கை. ஆனால், பாதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, அதாவது சிக்கந்தர் தர்காவுக்கு கீழே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுங்கள் என கேட்பது ஆன்மிகம் அல்ல, அரசியல் என முதல்வர் மதுரையில் முழங்கியிருக்கிறார். தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1920-ஆம் ஆண்டிலேயே நீதிமன்றத்திற்கு வந்து விட்டது. லண்டன் நீதிமன்றம் வரை சென்று தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமைக்காக போராடியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் அவலம் எங்காவது நடக்குமா? இந்துக்களுக்கு அநீதி இழைத்து விட்டு, உரிமைக்காக போராடினால் மலிவான அரசியல் என்கிறார் முதல்வர். மதுரை அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதித் துறைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சயில் உறுதியாக தீபம் ஏற்றப்படும். திமுகவின் மலிவான இந்து விரோத அரசியலுக்கு முடிவு கட்டப்படும்'' என்று வானதி சீனிவாசன் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Vanathi Srinivasan condemns Chief Minister MK Stalin for publicly threatening the judiciary and the Constitution