நீதி நிறைவேற்றிய நெல்லை நீதிமன்றம்! முக்கூடல் கொலை வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு! - 5 பேருக்கு ஆயுள் தண்டனை!
Nellai court delivers justice Shocking verdict in triple murder case Life sentence for 5 people
கடந்த 2017ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனியில், குடும்ப தகராறின் பின்னணியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் தற்போது நீதி கண்டுள்ளது. அப்போது ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக, பெண்ணின் குடும்பத்தினர் சேர்ந்து வெற்றிவேல் (வயது 23) என்பவரை கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, முழுமையான புலனாய்வின் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணை நிறைவில், நீதிபதி செல்வம், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளான மாரிமுத்து (37), ஜெகதீஸ் (32), சீத்தாராமன் (43), இஷா (35), சுடலைமாடி (61) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்தார். மேலும், முக்கிய குற்றவாளிகளான மாரிமுத்து மற்றும் ஜெகதீஷ் இருவருக்கும் கூடுதலாக
IPC 148 பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,000 அபராதம்,
IPC 449 பிரிவின் கீழ் 9 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அனைத்து தண்டனைகளும் ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சாட்சிகளை திறம்பட ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மற்றும் முக்கூடல் காவல்துறை அதிகாரிகளையும், விசாரணையில் சிறப்பாக பங்காற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி (தற்போது நாங்குநேரி) மற்றும் சங்கரேஸ்வரி (தற்போது திருநெல்வேலி மாநகரம்), நீதிமன்றத்தில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 24 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் ஒருவருக்கு மரண தண்டனை, 80 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 22 பேர் சரித்திர குற்றவாளிகள் என காவல்துறை தெரிவித்துள்ளது.நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமின்றி தீர்ப்படையும் வகையில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், காவல்துறை வட்டாரங்கள் உறுதியளித்துள்ளன.
English Summary
Nellai court delivers justice Shocking verdict in triple murder case Life sentence for 5 people