அலட்சியம்..மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை!
Negligence High Court warning to the Municipal Commissioner
ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்ற அதிகாரிகள் அவமதித்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.எதிர்காலத்தில் இதுபோல ஐகோர்ட்டு உத்தரவை அலட்சியம் காட்டாமல், கவனத்துடன் தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘விருகம்பாக்கம், லம்பேர்ட் நகர், முதல் குறுக்கு தெருவில், விதிமீறல் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அந்த கட்டிடத்தை சீல் வைக்க அவ்வப்போது இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அதை சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை' என்று சென்னை ஐகோர்ட்டில், ஆர்.தாமஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,கூறியிருந்தார்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,இந்த விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்று 2023-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு அதிகாரிகள் தரப்பில் 4 வாரம் அவகாசம் கேட்ட நிலையில் அறிக்கையை ஏப்ரல் 30-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால், ஏப்ரல் 30-ந்தேதிக்கு பதில் ஆகஸ்டு 12-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர், என்ஜினீயர், கோடம்பாக்கம் உதவி உதவி என்ஜினீயர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தற்போது, கடந்த ஜூலை 15-ந்தேதிதான் முதல் மற்றும் இரண்டாம் தளங்களை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதன்மூலம், ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்ற அதிகாரிகள் அவமதித்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.அதேநேரம், தற்போது கட்டிடத்துக்கு சீல் வைத்து விட்டோம் என்று கூறி அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கின்றனர். அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிர்காலத்தில் இதுபோல ஐகோர்ட்டு உத்தரவை அலட்சியம் காட்டாமல், கவனத்துடன் தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம். தற்போது இந்த கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதால், அதன் உரிமையாளர் கட்டிடத்தை இடிக்கவும், மீண்டும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்கவும் விண்ணப்பம் செய்யலாம். அதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
English Summary
Negligence High Court warning to the Municipal Commissioner