நீட் வினாத்தாள் கசிவு: நாசிக்கில் தொடங்கி கேரளா வரை பரவிய மோசடி - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
NEET Paper Leak: Scam Spread from Nashik to Kerala - Shocking Revelations in CBI Probe!
மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET UG) தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்களின்படி, தேர்வு தொடங்குவதற்கு சுமார் 45 மணி நேரத்திற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. ராஜஸ்தானின் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், தனது தந்தைக்கு ‘Guess Paper’ என்ற பெயரில் அனுப்பிய ஒரு PDF கோப்பு மூலம் இந்த முறைகேடு முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர்கள் அந்த பிடிஎஃப் கோப்பை உண்மையான வினாத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே பொருந்தி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில், உளவுத்துறை மற்றும் ராஜஸ்தான் சிறப்பு அதிரடிப் படை விசாரணையைத் தொடங்கின.
இந்த வினாத்தாள் கசிவு நெட்வொர்க்கின் முக்கியக் குற்றவாளியாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த 30 வயதான ஆயுர்வேத மருத்துவ மாணவர் சுபம் கைர்னார் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புனேவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு வினாத்தாளை வாங்கி, அதை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் ஆப்ஸ் மூலம் பரிமாறப்பட்டுள்ளன. மேலும், போர்ட்டபிள் ஸ்கேனர்கள், டெலிகிராம் நெட்வொர்க்குகள் மற்றும் ஷேடோ சர்வர்கள் மூலம் வினாத்தாள் மிக வேகமாகப் பரப்பப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கத் தனது தலைமுடியைக் குறைத்துக் கொண்டு அடையாளத்தை மாற்றிய சுபம், ஒரு கோவிலுக்குச் சென்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி மகாராஷ்டிராவில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கேரளா எனப் பல மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. குறிப்பாக கேரளாவில் மட்டும் சுமார் 200 மாணவர்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், சிபிஐ அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மனிஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மாண்ட்வாரியா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
NEET Paper Leak: Scam Spread from Nashik to Kerala - Shocking Revelations in CBI Probe!