தமிழ் எழுத்துகளில் பெயர்பலகை..நடவடிக்கை தேவை.. MLA நேரு வலியுறுத்தல்!
Name board in Tamil letters action needed MLA Nehrus insistence
தமிழ் எழுத்துகளில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் நேரு வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி கூடங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், திரை அரங்குகளில் பெயர் பலகைகளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் அதிக அளவில் இடம்பெற்று இருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதுடன் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்படி வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் முதல் வரிசையில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற வேண்டும். அடுத்த வரிசைகளில் தான் பிற மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என்று நான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பி இருந்தேன். அதன் எதிரொளியாக எனக்கு பதில் அளித்த மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள பெயர் பலகைகளில் முதல் வரிசையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவித்து உத்தரவிட்டார். அதை கடைபிடிக்க வேண்டிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் முதல்வரின் உத்தரவை மீறும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதேநேரத்தில் அரசு துறைகளில் உள்ள பெயர்பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம்பெறாமல் இருப்பது கண்டிக்கதக்கது. அரசுதுறைகளின் இந்த செயல்கள் மாநில முதலமைச்சரின் உத்தரவை மீறும் செயலாக கருதபடவேண்டும். முதல்வரின் உத்தரவை மீறி தமிழில் பெயர்பலகை வைக்காத சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய்மொழியான தமிழை காக்கும் விதமாக தமிழில் பெயர்பலகை வைக்காத நிறுவனங்களை எதிர்த்து போராட தமிழர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
முதலமைச்சரின் துறையின் கீழ் வரும் அரசின் பொதுதுறை நிறுவனமான அமுதசுரபி நிர்வாகமானது தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்க செய்து கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உள்ள மருந்தகத்திற்கு ஆங்கில எழுத்துகளில் பெயர்பலகை வைத்திருந்ததை கண்டித்து கடந்த 31.08.2025 அன்று தமிழ் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி ஆங்கில எழுத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்பலகையை அகற்றும் விதமாக செயல்பட்டதாக தெரிகிறது.
அதற்கு அமுதசுரபி நிறுவனத்தின் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தமிழ் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது. இது கண்டிக்கதக்கது. அவர்கள் மேல் பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
அதேநேரத்தில் தாய்மொழியான தமிழை புறக்கணித்தும், அரசு உத்தரவையும் மீறி தமிழ் எழுத்துகளில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் பிறநிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் நேரு வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Name board in Tamil letters action needed MLA Nehrus insistence