இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை தான் இந்தியாவில் மதசார்பின்மை இருக்கும் - மத்திய அமைச்சர் பேட்டி!
CAA Sukanta Majumdar central minister hindu india
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசம் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: பல தசாப்தங்களாக கிழக்கு பெங்காளில் இருந்து வந்த தலித் அகதிகள் யாராலும் கவனிக்கப்படவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அவர்களின் நிலையை உணர்ந்து நடவடிக்கை எடுத்தார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக தலித்கள், தொடர்ந்து கொடுமைகள் மற்றும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெண்கள் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். 1947 முதல் அவர்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலத்துக்காக சிஏஏ (CAA) சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது மோடியின் வரலாற்றுச் சாதனையாகும்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதே மதச்சார்பின்மை மற்றும் கம்யூனிசத்திற்கு அடித்தளம். இல்லையெனில் அவை நிலைக்க முடியாது. ஏனெனில், சகிப்புத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கும் மனப்பான்மையையும் கொண்டது இந்துக்கள் மட்டுமே என தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டினர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டிய அவர், உலகின் எங்கிருந்தாலும் ஒருவர் இந்துவாக இருந்து கொடுமைக்கு ஆளானால் அல்லது மத வழிபாடுகளைச் செய்ய தடைகள் இருந்தால், அவர் இந்தியாவில் அடைக்கலம் கோரலாம் என குறிப்பிட்டார்.
அதேசமயம், சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்தச் சட்டத்தின் படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடிப்படையிலான கொடுமைகளை சந்தித்தவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
CAA Sukanta Majumdar central minister hindu india