திடீர் தீ விபத்தால் 5 குடிசைகள் எரிந்து நாசம்! முன்னாள் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
Namakkal cottages burnt down due to sudden fire
நாமக்கல், பள்ளிபாளையம் அருகே சின்ன கவுண்டன் பாளையம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் ராஜவேல், பொன்னுசாமி ஆகியோர் வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். மளமளவென ஏறிய தொடங்கிய தீயை அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுக்க அங்கிருந்தவர்கள் தீட்டை அணைக்க முயற்சித்தனர்.
தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் அதனை அணைக்க முடியவில்லை என்பதால், இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் வரிசையாக இருந்த 5 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு துறையினர் 12 மணிக்கு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பொன்னுசாமி என்பவர் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் மேலும் தீயானது பரவ தொடங்கியது.
தீ விபத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் 5 குடிசைகளும் அதிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்தில் மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புடைய பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தெரிய வந்ததும், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொது மக்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அருகில் இருந்த பள்ளியில் இரவு தங்க வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Namakkal cottages burnt down due to sudden fire