''ஆர் .எஸ்.எஸ். இந்துக்களுக்கான சங்கம் என்பதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல'': மோகன் பகவத்..!
Mohan Bhagwat says RSS is not against Muslims and Christians
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்வியாளர்கள், பிரபலங்களுடன், ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழகத்தில் உள்ள பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது குறித்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: “ராஷ்டிரிய சுவயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். சங்கம் துவங்கப்பட்டு தற்போது 100 ஆண்டுகளை கடந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகதான் ஆர்எஸ்எஸ் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளதாகவும், தற்போது சங்கத்தை பற்றி விவாதங்கள் நடைபெற்றாலும் அதில் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது சங்கத்தை பற்றி தெளிவான தகவல்களோ ஏதும் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உலகளவில் வேறு எந்தச் சங்கமும் இல்லை துன்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு சங்கத்தை நாம் பார்த்ததில்லை எனவும், சங்கத்தை வெளியில் இருந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். அதாவது, எப்படி வானத்தைப் பார்த்தால், கடலைப் பார்த்தால் புரியாதோ, அதுபோன்றுதான் சங்கத்தை வெளியில் இருந்து பார்த்தால் ஒன்றும் புரியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விஹெச்பி வழியாகவோ அல்லது பாஜக வழியாகவோ சங்கத்தை புரிந்துகொள்ள முடியாது என்றும், சங்கத்தின் உள்ளே வந்து பார்த்தால்தான், அதாவது சகா கூட்டங்கள், சுவயம் சேவகர்கள், அவர்களுடைய குடும்பத்தை நேரில் சந்தித்து பார்த்தால்தான் அதனுடைய முழுமையும், முக்கியத்துவமும் புரியவரும். சங்கம் என்பது சக்திவாய்ந்த ஒரு தனியான அமைப்பு கிடையாது என்றும் பேசியுள்ளார்.

சங்கமானது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்று நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும், மொத்தத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக சங்கம் செயல்படுகிறதாகவும், சங்கத்துக்கும், சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி களையப்பட வேண்டும் என்றும், நாம் அனைவரும் சங்கத்தின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சங்கத்தில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் குறிப்பாக, இந்தியா முழுவதும் சென்று தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களிடம் சங்கத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்களையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன், கடந்த காலங்களில் சங்கத்துக்கு இந்த அளவுக்கு ஓர் அங்கீகாரம் இல்லை. ஆனால், தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் சங்கத்துக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

பலரின் தவறான புரிதல் காரணமாக சங்கம் குறித்து சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறதாகவும், இந்த சங்கம் என்பது யாருக்கும் எதிராக உருவாக்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பிரிட்டிஷார் என யாருக்கும் எதிராக உருவாக்கப்பட்டது கிடையாது என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சங்கம் இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்துக்களுக்கான சங்கம் என்பதால் மட்டுமே, இது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல. இந்து சமுதாயம் என்று நாம் சொல்வது வழிபாடு அல்ல. வாழ்வியல் முறை என்று எடுத்துரைத்துள்ளார்.
மேலும், ஆ.எஸ்.எஸ் அமைப்பு குறித்த தவறான புரிதலும், பொய்யான தகவல்களும் தொடர்ந்து பரவி வருகிறது. இதனை நாம் அனைவரும் சேர்ந்து அவற்றை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சங்கத்தின் முக்கியத்துவத்தையும், அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இந்த சமுதாயத்துக்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mohan Bhagwat says RSS is not against Muslims and Christians