வாயிலை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த கும்பல்...! கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அரங்கேறிய தள்ளுமுள்ளு...!
mob entered by pushing the gate scuffle that took place Gummidipoondi Chipkot
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தனியார் தொழிற்சாலைகளில் கட்டாயமாகப் பணம் வசூலிக்க முயன்றதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொலிக் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 17-ந்தேதி அங்கு வந்த சில திருநங்கைகள், ஆயுத பூஜை பண்டிகைக்காகப் பணம் தர வேண்டும் எனத் தொழிற்சாலை ஊழியர்களிடம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆவேசமடைந்த அவர்கள், தொழிற்சாலையின் பிரதான நுழைவாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.நிலைமையை உணர்ந்த பாதுகாப்புப் பணியாளர்களும் தொழிற்சாலை ஊழியர்களும் உடனடியாக நுழைவாயிலை மூடி, அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலிக் காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவியதைத் தொடர்ந்து, இச்சம்பவம் கவனம் பெற்றுள்ளது.ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில், ஒவ்வொரு தொழிலாளரும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வற்புறுத்தி, மிரட்டிப் பணம் வசூலிக்க முயற்சிப்பதாகத் தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகார்களின் அடிப்படையில், தொழிற்சாலைகளுக்குள் அனுமதியின்றி நுழைந்து மிரட்டிப் பணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பண்டிகைக் காலத்தில் பணம் வசூலிப்பது தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார், தொழிற்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mob entered by pushing the gate scuffle that took place Gummidipoondi Chipkot