நயினார் நாகேந்திரனுக்குப் பதிலாக சரத்குமாரா...? - ஊடகங்களின் யூகங்களுக்கு நடிகர் சரத்குமார் விளக்கம்...!
Sarathkumar replace Nayinar Nagendran Actor Sarathkumar explains media speculations
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததால், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை மாற்றுவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், அடுத்த மாநிலத் தலைவராக நடிகர் சரத்குமார் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்கலாம் என்றும் பேசப்பட்டது.
ஆனால், ஏற்கெனவே மாநிலத் தலைவர் பொறுப்பை வகித்தவர்களையே மீண்டும் அதே பதவியில் அமர்த்தும் நடைமுறை இல்லை எனக் கூறப்படுவதால், இம்முறை புதிய ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
.jpg)
தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமார், தற்போது அக்கட்சியின் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். இதனால், அவரைத் தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து கட்சித் தலைமை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமாரிடம், தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்குப் பதிலளித்த அவர், “அதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக என்னிடம் தெரிவிக்கப்படும் போது அது குறித்து எனது கருத்தைத் தெரிவிப்பேன்.
தற்போது ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க முடியும்” என்றார்.சரத்குமாரின் இந்தப் பதில், தமிழக பாஜக தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்படுமா என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இருப்பினும், புதிய மாநிலத் தலைவர் யார் என்பது கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே உறுதியாகும்.
English Summary
Sarathkumar replace Nayinar Nagendran Actor Sarathkumar explains media speculations