ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!
MMN party protest chennai 2023
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து, சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம் நடத்தப் போவதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், "ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவைத் தமிழக சட்டப் பேரவை கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளித்திருந்தார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பிலுள்ள நிலையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, தமிழக ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது”.
English Summary
MMN party protest chennai 2023