பெற்றோர்களே அலர்ட்....! 28-ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா போலியோ சொட்டு மருந்து முகாம்...!
Mega polio vaccination camp across Tamil Nadu 28th
தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது.தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த முகாமின் மூலம் மாநிலம் முழுவதும் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்கள் அமைப்பு
மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு தடையின்றி போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து முகாம்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஜூன் 28-ஆம் தேதி அனைத்து மையங்களிலும் மருந்து வழங்கப்படும். தொடர்ந்து ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களில் சேவை நீடிக்கும்.பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாமின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மேலும், தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மகத்தான பொதுசுகாதார பணியில் 2 லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி, 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து வழங்க முன்வர வேண்டும் என தமிழக அரசு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
Mega polio vaccination camp across Tamil Nadu 28th