மதநல்லிணக்கம் தழைக்கட்டும்...மனிதநேயம் ஓங்கட்டும்...! - இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் விஜய் நெகிழ்ச்சியான பக்ரீத் வாழ்த்து...!
May religious harmony flourish May humanity flourish Chief Minister Vijay extends his warmest Bakrid greetings Muslim community
புனிதப் பெருநாளான பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,"ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியவர்களின் உன்னதமான இறைபக்தியையும், ஈடு இணையற்ற தியாகத்தையும் உலகம் முழுவதும் உள்ள மனிதகுலத்திற்கு நினைவூட்டும் உன்னத நாளாக இப்பக்ரீத் திருநாள் அமைகிறது.
இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பிறருக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய வாழ்வியல் விழுமியங்களை உலகிற்கு உரக்கச் சொல்லும் புனித நாளாக பக்ரீத் திகழ்கிறது. ஏழை, எளிய மக்களுடன் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் தழைக்க வேண்டும் என்பதையும் இத்திருநாள் நமக்கு வலியுறுத்துகிறது.
இந்த நன்ன நாளில், நம் சமுதாயத்தில் மனிதநேயமும், பரஸ்பர மதநல்லிணக்கமும் மேலும் ஓங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
May religious harmony flourish May humanity flourish Chief Minister Vijay extends his warmest Bakrid greetings Muslim community