போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!
Man arrested for posing as police officer
திருவள்ளூர் அருகே போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கேவிஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் பட்டரைப் பெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் இரயில் நிலையம் அருகே ஸ்ரீ ராம்நகர் பகுதியில் தாலுக்கா போலீசார் இரவு ரோந்து பணிக்காக சென்றனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை ஒட்டி வந்தது திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் எல்லையம்மன் கோவில் தெரு, பெரிய காலனியை சேர்ந்த செல்வகுமார்(34) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், வாகனத்தின் பின்னால் ஆந்திர மாநிலம் கே.வி. ஆர் புரத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், செல்வகுமார் என்பவர் தன்னை போலீஸ் எனக்கூறி, கையில் வைத்திருந்த செல்போனை தன்னிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு சரமாரியாக தாக்கியதாகவும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் உதயகுமாரை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Man arrested for posing as police officer