திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Maha Kumbhabhishekam at Tirupparangunram Murugan Temple Millions of devotees participate
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ரூ.2.36 கோடி மதிப்பில் நடைபெற்ற திருப்பணிகளைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் 75 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஜூலை 10 முதல் நான்கு நாட்கள் யாகவேள்விகள் நடைபெற்றன. 85 பேர் கொண்ட ஒதுவார் குழுவினர் திருமுறை, வேத பாராயணத்துடன் யாகசாலையில் பங்கேற்றனர். 7 பெண்கள் பங்கேற்றது சிறப்பம்சமாகும்.
இன்று அதிகாலை 8 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள், நாதஸ்வரம் இசையுடன் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட கலசங்கள் புறப்பட்டு, 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜகோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றும் போது, "அரோகரா" கோஷங்கள் முழங்க, பக்தர்கள் உணர்ச்சி பொங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த புனிதநீர் டிரோன் மூலமாக பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.
மேலும், கருவறையில் முருகப்பெருமான் தங்கவேலுக்கு, துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய விக்ரகங்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தை நேரில் காண திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர்.
English Summary
Maha Kumbhabhishekam at Tirupparangunram Murugan Temple Millions of devotees participate