மதுரையில் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய சைக்கோ போலீஸ் கைது!
madurai police arrest
வரதட்சிணை கேட்டு ஆசிரியையான தனது மனைவியைத் தாக்கி கொடுமைப்படுத்திய காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை: அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பூபாலன் (வயது 38). இவர் கடந்த 2018-ல் தனியார் பள்ளி ஆசிரியையான தங்கப்பிரியாவை (32) திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சிணை கோரிக் கொண்ட பூபாலன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட வாக்குவாதம் கோரமான முறையில் முடிவுக்கு வந்தது. பூபாலன் தங்கப்பிரியாவை தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தங்கப்பிரியாவின் குடும்பத்தினர் புகார் அளிக்க, பூபாலன், அவரது தந்தை செந்தில்குமரன், தாயார் விஜயா மற்றும் உறவினர் அனிதா ஆகிய நான்கு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, பூபாலன் தனது சகோதரியிடம் செல்போனில் தனது மனைவியை எப்படி எல்லாம் கொடுமை படுத்தினேன் என்பது குறித்து பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகியது.
இதனையடுத்து பூபாலனும், அவரது தந்தையும் (காவல் ஆய்வாளர்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 3 தினங்களாக தலைமறைவாக இருந்த பூபாலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.