கிட்னி விற்பனை விவகாரம்: தனி விசாரணைக்குழுவை அமைத்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை..!
Madurai Bench of the High Court has formed a separate investigation committee into the kidney sale issue
கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த, தனி விசாரணைக்குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர், 'கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது என்றும், இந்த வழக்கின் விசாரணையை, சிபிஐ நடத்த உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இத போது, 'கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?,' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, புகார் அளித்தால் மட்டுமே குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், 'பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தெரிந்த பிறகு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இக்குழு நடத்தும் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும் என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்டம்பர் 24-க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Madurai Bench of the High Court has formed a separate investigation committee into the kidney sale issue