6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கு - நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
Madras High Court Verdict on AIADMK 6 MLAs Resignation Case Expected Soon
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
நம்பிக்க வாக்கெடுப்பின் போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த மரகதம் குமரவேல், எஸ். சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி மனுக்கள் நிலுவையில் இருந்தன.
அந்தச் சமயத்தில், அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவசர அவசரமாகச் செய்யப்பட்டது என்றும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறுபுறம், ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சொந்த விருப்பத்திற்கு மாறாகப் பதவியில் தொடரச் சொல்ல முடியாது என்றும், உரிய விசாரணைக்குப் பின்னரே ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வில் இவ்வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், சபாநாயகரின் உத்தரவு குறித்த தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madras High Court Verdict on AIADMK 6 MLAs Resignation Case Expected Soon