விபத்தில் தொடங்கிய பாசம்... உயிரைப் பறித்த கள்ளக்காதல்...! பணப் தகராறால் விபரீதத்தில் முடிந்த சோகம்...!
love that started accident false love that took a life tragedy that ended tragically due money dispute
விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மனிதநேயத்துடன் உதவிய பெண்ணுக்கும், அவரை மீட்ட நபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. பின்னர் அந்த உறவில் ஏற்பட்ட விரிசல், காவல் நிலைய புகார், கைது என தொடர்ந்த நிலையில், வழக்கை வாபஸ் பெற மறுத்த ஆத்திரத்தில் பெண் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்த பானுமதி, தனது மகளுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் பானுமதி காத்திருந்தார்.

அப்போது அவரது கண் முன்னே சாலை விபத்து ஒன்று நடந்தது. இதில் ஆனைமலையைச் சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் படுகாயமடைந்தார்.விபத்தில் சிக்கிய பிரபாகரனை மனிதநேயத்துடன் மீட்ட பானுமதி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்கும் உதவியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் மூலம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அந்த அறிமுகம் நெருக்கமான பழக்கமாக மாறி, நாளடைவில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.பிரபாகரனும் தனது மனைவியை ஏற்கனவே பிரிந்திருந்த நிலையில், உடுமலையில் தேநீர் தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார்.
இதனால் இருவரும் நெருக்கமாக பழகி, கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும், பிரபாகரன் அவ்வப்போது பானுமதிக்கு பண உதவியும் செய்து வந்துள்ளார். பானுமதியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர், பிரபாகரன் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு பானுமதியின் மருமகன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரபாகரனுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து, பானுமதி பிரபாகரனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.தன்னிடம் பேசுவதை பானுமதி தவிர்த்ததால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, பிரபாகரன் மீது பானுமதி உடுமலை காவலர்களிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் பானுமதி மீது பிரபாகரனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பானுமதியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரது அழைப்புகளை பானுமதி தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதியின் வீட்டிற்கு பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது பானுமதி தனது உறவினரான மயில்சாமியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு பானுமதியிடம், தன் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுமாறு பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு பானுமதி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பிரபாகரன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்துள்ளார்.
கையில் எடுத்த மண்வெட்டியால் பானுமதியின் தலையில் பிரபாகரன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற உறவினர் மயில்சாமியையும் அவர் கல்லால் தாக்கியுள்ளார்.தாக்குதலில் நிலைகுலைந்து மயில்சாமி கீழே விழுந்த நிலையில், பிரபாகரன் தொடர்ந்து பானுமதியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக அங்கு சென்று பானுமதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மயில்சாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பானுமதியை கொலை செய்ததாக கூறப்படும் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
love that started accident false love that took a life tragedy that ended tragically due money dispute