சிம்பு – அஸ்வத் மாரிமுத்து படம் எப்போது தொடங்கும்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்ன தகவல்!
When will the Simbu Ashwath Marimuthu film begin Producer Archana Kalpathi shares the details
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸில் ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதற்கிடையே, வெற்றிமாறன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் சிம்பு கைகோர்த்தார். இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த படம் தற்போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தர்மா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் சிம்பு நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:“அடுத்த வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்புகிறேன். அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் படத்தை எப்போது முடிக்கிறார் என்பதைப் பொறுத்துதான் இது அமையும். ‘அரசன்’ படத்தால் அஸ்வத் மாரிமுத்துவின் படத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் செய்வதற்குத்தான் திட்டமிட்டிருந்தார்.எனக்கு சிம்புவை நீண்ட காலமாகத் தெரியும். இந்தக் கதையை எழுத அஸ்வத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது.
அவர் கதையை எழுதி முடித்த பிறகு திரைக்கதையில் எந்த மாற்றமும் இருக்காது. அனைத்தையும் காகிதத்திலேயே சரியாகச் செய்துவிடுவார்.அதனால் அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று சிம்புவும் கூறினார். அதன்பிறகுதான் ‘அரசன்’ படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில்தான் அஸ்வத்துக்கு ‘தர்மா’ பட வாய்ப்பும் கிடைத்தது. அது மிகப்பெரிய வாய்ப்பு. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதை முடித்துவிட்டு வந்ததும் STR 51 படத்தின் பணிகளை தொடங்குவோம்.”
இதன் மூலம் STR 51 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்துவின் தற்போதைய படப்பணிகள் நிறைவடைந்ததும் சிம்பு படத்திற்கான அடுத்தகட்ட பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு–அஸ்வத் மாரிமுத்து கூட்டணி ஒருபுறம், வெற்றிமாறன்–சிம்பு கூட்டணி மறுபுறம் என அடுத்தடுத்த படங்களில் சிம்புவின் தேர்வுகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
English Summary
When will the Simbu Ashwath Marimuthu film begin Producer Archana Kalpathi shares the details