“கருணாநிதி இரவில் கைது செய்யப்பட்டதை பார்த்து கலங்கிவிட்டேன்” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உருக்கம்!
I was deeply distressed to see Karunanidhi arrested at night Speaker J C D Prabhakar expresses emotion!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தான் அதிமுகவில் இருந்து விலகி சில காலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைப் பார்த்து மிகவும் கலங்கியதாகவும் நினைவுகூர்ந்தார்.
“ஆபாசமாகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசினாலும், சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை முதலில் அதைக் கண்டிக்க வேண்டும். அத்தகைய வார்த்தைகளை உங்கள் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்களிடம் சொல்லிப் பார்த்து, இதுபோன்று பேசுவது சரியா என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் மனசாட்சியும் அதை ஏற்றுக்கொள்ளட்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கருணாநிதி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருந்ததாக கூறிய ஜேசிடி பிரபாகர், “கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட காட்சியை பார்த்ததும் நான் கலங்கிவிட்டேன்” என்று தனது மனைவியிடம் கூறியதாக நினைவுகூர்ந்தார்.
அப்போது அவரது மனைவி, “வயதானவர். அவர் என்ன ஓடிப் போய்விடவா போகிறார்? எதற்காக இரவு நேரத்தில் கைது செய்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து தான் சார்ந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனாரைத் தொடர்புகொண்டு, கருணாநிதியின் கைது நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். சில நிர்வாகிகள் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கூறியபோதும், வயது முதிர்ந்த ஒருவரை, தமிழகத்திற்காக நீண்ட காலம் பணியாற்றிய ஒருவரை இரவு நேரத்தில் கைது செய்து அழைத்துச் சென்றது தவறு என்றும், அந்தத் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்றும் கூறி மூப்பனாரை அறிக்கை வெளியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தவறு எங்கு நடந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை அதைக் கண்டிக்க வேண்டும். குறிப்பாக வன்முறை பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலை இந்தியா முழுவதும் கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் நாடே பார்க்கிறது. எனவே ஆபாசமான மற்றும் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்” என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும், முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் மார்க்கண்டேயனின் பேச்சு தொடர்பாக அமைச்சர்கள் அவையில் நடவடிக்கை கோரியிருந்த நிலையில், தற்போது அவை உரிமைக் குழு இல்லை என்றும், அந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னர் மார்க்கண்டேயனிடம் உரிய விளக்கம் கேட்டு விவகாரம் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
“வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், சென்னையில் மேம்பாலங்கள் அமைத்ததில் ரூ.120 கோடி நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கைது தொடர்பான காட்சிகள் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
I was deeply distressed to see Karunanidhi arrested at night Speaker J C D Prabhakar expresses emotion!