தவெக வேட்பாளர் சத்யபாமாவை பல்டி பாமா என உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்! வலுக்கும் கண்டனம்!
Dharapuram By-Poll DMK Chief MK Stalin Slams Ex-MLA Sathyabama for Killing Democracy and Forcing Unnecessary Election
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துச் சித்தராவுத்தன்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
"5 மாதங்களில் இடைத்தேர்தல் ஏன்?":
பொதுத் தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார். பொதுவாக ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காலமானால் மட்டுமே இடைத்தேர்தல் வரும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த இடைத்தேர்தல் அப்படி வரவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் தவெக ஆளுங்கட்சிக்குத் துணைபோனதாலும், விலைபோனதாலும் மட்டுமே இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது எனச் சாடிய மு.க.ஸ்டாலின், வாக்களித்த பொதுமக்கள் மீது துளிகூட மதிப்பில்லாமல், தேர்தலில் வைக்கப்பட்ட விரல் மை அழிவதற்கு முன்பாகவே வேறு கட்சிக்குத் தாவியவர்களின் செயல்தான் இந்த இடைத்தேர்தலுக்கு முழுமுதற் காரணம் எனத் தனது பிரசாரத்தில் காரசாரமாகக் குறிப்பிட்டார்.
உருவ கேலி சர்ச்சை:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமா ஜனநாயகத்தைச் சாகடித்துவிட்டதாகவும், அதனாலேயே இந்தத் தேவைற்ற இடைத்தேர்தல் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சத்தியத்திற்கு மாறாகச் செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் "பெட்டி பாமா", "பல்டி பாமா" என்று அழைப்பதாகத் தெரிவித்த அவர், அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவர் எப்படித் திடீரெனப் பல்டி அடித்தார் என்றே தெரியவில்லை என விமரிசித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் என்றும் பாராமல் உருவ கேலி செய்துள்ளதாக தவெக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
English Summary
Dharapuram By-Poll DMK Chief MK Stalin Slams Ex-MLA Sathyabama for Killing Democracy and Forcing Unnecessary Election