விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி குறித்து போராடிவரும் விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!
Ministers hold talks with farmers representatives who are struggling for complete agricultural loan waiver
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.நிர்மல் குமார், ராஜ்மோகன், வினோத், வெங்கடரமணன், காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 25 விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த முன்னணி தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், பி.அய்யாகண்ணு, சாமி நடராஜன், பி.எஸ்.மாசிலாமணி, ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வட்டி தவணை முடியும் தருவாயில் திரும்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் தள்ளுபடி அறிவிப்பில் பயன்பெற அனுமதிக்க வேண்டும் என்றும், குடும்ப அட்டைக்கு ஒருவர் என்ற பாகுபாடு கூடாது என்றும், ஏற்கெனவே கடந்த கால ஆட்சியில் தள்ளுபடி செய்த வழிமுறையை பின்பற்றி தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
அதன் பின்னர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது; ''விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். உரிய அறிவிப்புகள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.''என்று கூறினார்.

தொடர்ந்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு பேசும்போது; ''08 அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறையை கேட்பது இதுவே முதல்முறை. எங்கள் கோரிக்கள் மீது நல்ல முடிவு ஒரு வாரத்தில் வரும்'' என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலர் சித்திக், கூட்டுறவுத் துறை செயலர் பி.அமுதா, வேளாண் துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தளி ராமச்சந்திரன், கீழ்வேளூர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.மாரிமுத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ministers hold talks with farmers representatives who are struggling for complete agricultural loan waiver