பண ஆசையால் பறிபோன வாழ்க்கை...! சென்னை ஏர்போர்ட்டில் 4 கோடி ரூபாய் கஞ்சாவுடன் மாட்டிய பட்டதாரி வாலிபர்...!
life lost due desire money graduate youth caught 4 crores ganja at Chennai airport
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மலேசியாவைச் சேர்ந்த சுமார் 25 வயது வாலிபர் ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது சூட்கேசுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பாக்கெட்டுகளை திறந்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 4 கிலோ 33 கிராம் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மலேசிய வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் பட்டதாரி என்பதும், தற்போது வேலை இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் கஞ்சா கடத்தல் கும்பலின் வலையில் சிக்கி, அவர்களுக்கு உதவியாக போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
life lost due desire money graduate youth caught 4 crores ganja at Chennai airport