கரூர் கூட்ட நெரிசல்: சீனா இரங்கல்!
Karur stampede China expresses condolences
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் இரங்கல் தெரிவித்துள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “ விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்தில் சீன நாட்டினருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karur stampede China expresses condolences