2026 தேர்தல் வியூகம்: 70 முக்கிய தொகுதிகளை லிஸ்ட் எடுத்த திமுக! அங்கே மட்டும் தீவிரமாக வேலை பார்க்க முடிவு! ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது தேர்தல் வியூகத்தை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. வரும் தேர்தலில் சுமார் 70 சட்டமன்றத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் எப்படியாவது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் திமுக களப்பணிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தேதி பிப்ரவரி கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், திமுக மற்ற கட்சிகளைப் போல கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிக நேரம் செலவிடாமல், நேரடியாக களத்தில் இறங்கி அமைப்பு ரீதியான பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

மகளிரணி, இளைஞரணி, செயல்வீரர்கள், பூத் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அடித்தளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திமுக தலைமை முழு கவனத்தையும் களப்பணிகளிலேயே செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், உளவுத்துறை அறிக்கைகள், உட்கட்சி ஆய்வுகள், தற்போதைய எம்எல்ஏக்களின் நிலை, வாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 70 முக்கிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தத் தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய தனி கவனம் செலுத்தும் வகையில் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொங்கு மண்டலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி செயல்பாடு பலவீனமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கொங்கு மண்டலத்தில் உள்ள 35 தொகுதிகளில் இந்த முறை தீவிர களப்பணிகளை மேற்கொள்ள திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்டா பகுதி பொதுவாக திமுகவின் பாரம்பரிய கோட்டையாக இருந்தாலும், இந்த முறை சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல். அதனால் டெல்டா பகுதியில் 7 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அதேபோல், திமுக வலுவாக உள்ள சென்னை நகரிலும் 4 குறிப்பிட்ட தொகுதிகளில் களப்பணிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்குடன் தென் மண்டலத்தில் சுமார் 10 தொகுதிகளும், கடந்த தேர்தலில் 5,000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகளும், 10,000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளும் சிறப்பு கவனத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தகைய தொகுதிகளில் வாக்காளர்களை உறுதிப்படுத்தும் வகையில் பூத் அளவிலான பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

மொத்தத்தில், சுமார் 70 தொகுதிகளை மையமாகக் கொண்டு திமுக வகுத்துள்ள இந்த வியூகம், தேர்தல் களத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த 70 தொகுதிகளில் திமுக மேற்கொள்ளும் களப்பணிகள் தேர்தல் அரசியலில் முக்கிய திருப்பங்களை உருவாக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 Election Strategy DMK has listed 70 key constituencies Decided to work seriously only there Do you know why


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->