விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கு; நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை; உடைந்தையாக இருந்தவர்களுக்கு 22 ஆண்டுகள் சிறை; கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீர்ப்பு..!
Kallakurichi court sentences female court employee to 37 years in prison for accident compensation cheque fraud
விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகன் மற்றும் உறவினருக்கும் தண்டனை முறையே 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் விபத்து வழக்கு ஒன்றுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,565 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போதைய நீதிபதியின் உதவியாளருக்கு உதவியாளராக இருந்த அறிவுச்செல்வி என்பவர், குறித்த உத்தரவு நகலை திருத்தி, நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.4,78,000-ஐ தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
இவ்வாறு மோசடி செய்து, மொத்தம் 06 விபத்து வழக்குகளின் உத்தரவுகளை திருத்தி, ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையை தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோரின் பெயர்களிலும் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வங்கிக்கு பணம் செலுத்தப்படுவதை அறிந்த வங்கி மேலாளர், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். குறித்த வழக்கு சிபிசிஐடியிடம் வசம் ஒப்படைக்கப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்றது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், குறித்த வழக்கு, 2024-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது அப்போது 03 மாவட்ட நீதிபதிகள் உட்பட அரசுத் தரப்பில் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 103 சான்று ஆவணங்கள் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 02 ஆண்டுகளில் 80 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி, முதன்மை குற்றவாளியான அறிவுச்செல்விக்கு 09 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசனுக்கு 08 பிரிவுகளின் கீழ் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Kallakurichi court sentences female court employee to 37 years in prison for accident compensation cheque fraud