நெல்லைக்குள்ள கஞ்சா சப்ளையா...? ரோந்துப் பணியில் சிக்கிய திடுக்கிடும் பின்னணி...! - 6.1 கிலோ கஞ்சா பறிமுதல்...!
Is there supply cannabis Nellai shocking background arrest during patrol 6point1 kg cannabis seized
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரே நாளில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் தொடர்புடைய 6 பேரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவலர்கள் வழக்கமான வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமூலக்கரை பகுதியைச் சேர்ந்த ரவி (24), சூர்யா (23), பேச்சிமுத்து (34) மற்றும் நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (19) ஆகியோரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில், விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கஞ்சாவுடன் ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு பேரையும் கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதேநாளில், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேலகுளம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிவந்திபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (33) மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து (24) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவலர்கள் கைப்பற்றினர்.இதுதொடர்பாக திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்.இந்த இரண்டு தனித்தனி நடவடிக்கைகளின் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ள காவலர்கள், இந்த வழக்கின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Is there supply cannabis Nellai shocking background arrest during patrol 6point1 kg cannabis seized