'ஆசிரியைக்கே தொடர் தொல்லையா'...? தூத்துக்குடியில் அட்டகாசம் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைப்பு...!
Is the teacher a constant nuisance youth who committed brawl Thoothukudi arrested and sent jail
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே பள்ளி ஆசிரியையை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று தகாத முறையில் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபரை, பொதுமக்கள் ஒன்றிணைந்து மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 47 வயதுடைய பெண் ஒருவர் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து, அங்கிருந்து பள்ளிக்கு நடந்து செல்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இந்த நிலையில், சிவஞானபுரத்தைச் சேர்ந்த கூடலிங்கத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன் (44), தற்போது முதலிபட்டியில் வசித்து வருகிறார். இவர் அந்த ஆசிரியையை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் செல்லும் வழியில் குறுக்கிட்டு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் ஆசிரியர் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், வழக்கம்போல் பேருந்து நிலையத்தில் இருந்து ஆசிரியர் பள்ளியை நோக்கி நடந்து சென்றபோது, முத்துக்கிருஷ்ணன் மீண்டும் அவரை பின்தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.
இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு, அவரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலர்களிடம் ஒப்படைத்தனர்.பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை காவலர்கள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முத்துக்கிருஷ்ணனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும், பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து அவர்களிடம் கைப்பேசி எண்களை கேட்டுப் பெற்றதாகவும், அதன் பின்னர் பல பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்த சம்பவம் சிங்கிலிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Is the teacher a constant nuisance youth who committed brawl Thoothukudi arrested and sent jail