கொலையா? தற்கொலையா? - நெல்லையில் ஒரு ஆண் உடல் சடலமாக மீட்பு... ரகசியத்தை உடைக்க தீவிர வேட்டையில் போலீசார்...!
male body recovered Nellai Police hunt solve mystery
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சாலையோரத்தில் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கருதி வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்குநேரி உட்கோட்டத்திற்குட்பட்ட களக்காடு காவல் நிலைய எல்லையில் உள்ள கருவேலங்குளம் பகுதியில் களக்காடு சேரன்மகாதேவி சாலையோரத்தில் இன்று அதிகாலை சுமார் 5.20 மணியளவில் ராமகிருஷ்ணன் (48) என்பவர் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.முதற்கட்ட விசாரணையில், ராமகிருஷ்ணன் நேற்று இரவு பன்றி பண்ணைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அதிகாலையில் அவர் சாலையோரத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, உடல் இழுத்துச் செல்லப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது சட்டை, கைப்பேசி மற்றும் மிதிவண்டி ஆகியவை சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை காவலர்கள் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
இதனால், ராமகிருஷ்ணனின் உயிரிழப்பு இயற்கையானதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து காவலர்கள் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் சத்தியா என்பவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அறிவியல் உதவி அதிகாரி மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த தடயங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து சேகரித்தனர்.திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா.சாஸ்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், அங்கு நடைபெற்று வரும் விசாரணை மற்றும் தடய சேகரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.சம்பவத்தின் பின்னணி மற்றும் ராமகிருஷ்ணனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணியில் நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் முடிவிலேயே இந்த மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
male body recovered Nellai Police hunt solve mystery