மாநிலத் தகுதிக்காக போராடும் MLA வை ஏளனம் செய்வதா? பொதுநல அமைப்புகள் கண்டனம்!
Is it mockery to belittle the MLA fighting for state rights Public welfare organizations condemn
மாநிலத் தகுதிக்காக போராடும் சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையிலான பொதுநல அமைப்புகளின் உழைப்பை ஏளனம் செய்வதா? என பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கோ.அழகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மதிப்புக்குரிய அய்யா திரு.இராமதாசு அவர்கள் மாநிலத் தகுதிக்காக போராடக் கூடிய சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்களின் தலைமையிலான பொது நல அமைப்புகளின் கடின உழைப்பை கிண்டல் மற்றும் விமர்சனம் செய்யும் விதமாக ஊடகங்களில் செய்தி விடுத்துள்ளது என்பது வியப்பளிக்கிறது.
அய்யா பேராசிரியர் இராமதாசு அவர்கள் மீது நாங்கள் பெரு மதிப்பு வைத்திருக்கிறோம். அவர் அரசியல் அனுபவம் அவர் வகித்த பதவிகள் அதன் மூலம் அவர் செய்த பணிகள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து தனி மாநிலத் தகுதி போராட்டக் குழுவை ஒருங்கிணைத்த போது, பேராசிரியர் அய்யா இராமதாசு அவர்களை நேரில் சந்தித்து அவருடைய அனுபவ மிக்க கருத்துக்களை கேட்டறிந்துதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாகத்தான் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது அதை தலைநகர் டில்லி வரை கொண்டு சென்று ஒன்றிய அரசை எப்படி வலியுறுத்துவது என்று திட்டமிட்டுள்ளோம் .அதற்கான நிதியினை யாரிடமும் கையேந்தாமல் அவரவர் சொந்த செலவில் பொதுநல அமைப்புகளின் உழைப்பை மட்டுமே நம்பி களப்பணி ஆற்றி வருகிறோம்.
போராட்டக் களத்தில் இருப்பவர்கள் சுயநலம் இல்லாமல் தன் குடும்பத்திற்கு கூட நேரத்தை செலவிட முடியாமல் மாநில உரிமையை பெற வேண்டும் என்ற அரசியல் உயரிய நோக்கத்தில் தொடர்ந்து பாடுபட்டு வரும் பொது நல அமைப்பு தலைவர்களின் உழைப்பை இழிவு படுத்துவதென்பது
அய்யா பேராசிரியர் இராமதாசு அவர்கள் தன்னைத் தானே விமர்சிக்கும் நிலைக்கு ஒப்பானது ஆகும்.
புதுச்சேரி மாநிலத் தகுதி வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தகுதி விடயத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இன்றி,1987 முதல் 2025 வரை 16 முறை புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
புதுச்சேரிக்கு மாநில தகுதி தேவையை பேராசிரியர் அவர்கள் நன்கு உணர்ந்தவர். அதற்காக பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியதுடன், அவரே பல அறிக்கைகளை கொடுத்திருக்கிறார். அதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல அவரால் முடியவில்லை தன்னுடைய இயலாமையை ஒப்புக் கொள்வதுடன் , முதல்வர் திரு. ரங்கசாமி மீதான வெறுப்பை உமிழ்வதற்கு பொதுநல அமைப்புகளின் உழைப்பை கொச்சைப்படுத்தி ஏளனம் செய்வது அவர் அனுபவம் மிக்க பொதுவாழ்க்கைக்கு இது அழகல்ல.
பொதுநல அமைப்புகள் தொடர்ந்து அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பல கட்ட போராட்டங்களை செய்து வருகிறோம். அதற்காக சட்டமன்ற உறுப்பினர் உட்பட பொதுநல அமைப்பு தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகளையும் சந்தித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவாளர் அல்ல எங்கள் நோக்கம் தனி மாநிலத் தகுதி பெற வேண்டும் என்பதே ஆகும். அதற்கு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் அவர்களிடம் கையொப்பம் பெற்று ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
புதுச்சேரி முதலமைச்சர் அய்யா திரு . ரங்கசாமி அவர்கள் தொடர்ச்சியாக தனி மாநிலத் தகுதி தேவை என்பதை ஊடக வாயிலாக வலியுறுத்தி வருகிறார்? அவர் உண்மையாக பேசுகிறாரா? அரசில் அல்லது தனது அரசியல் லாபத்திற்காக பேசுகிறாரா? என்பது எங்களுக்கு தேவையற்ற ஒன்றாகும். புதுச்சேரியில் தொடர்ச்சியாக என் ஆர் அவர்கள் முதலமைச்சராக இருக்கப் போவதுமில்லை ஆனால் பொது நல அமைப்புகள் மாநில உரிமையை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வருகிறோம். எங்கள் மீது எந்த அரசியல் கட்சி வண்ணத்தையும் யாரும் பூச வேண்டாமென்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் பிரெஞ்சு அரசாங்கத்திடம் தனித்தன்மையுடன் சிறப்புடன் வாழ்ந்த புதுச்சேரி மக்கள் இன்று தனித்தன்மை இழந்து ஒன்றிய அரசின் அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்றால் நாம் தன்மானத்தோடு தனி மாநிலத் தகுதியை கட்டாயம் நாம் பெற்றாக வேண்டும். அதற்கு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அய்யா இராமதாசு அவர்கள் நல்வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம் என ஒருங்கிணைப்பாளர் கோ.அழகர் தெரிவித்துள்ளார்.
English Summary
Is it mockery to belittle the MLA fighting for state rights Public welfare organizations condemn