நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை காணாமல் போனதாக தகவல்...! - விரைந்து மீட்கக் கோரி பாஜக தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழமையான முருகன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகக் கூறப்படும் மரகத முருகன் சிலை காணாமல் போனதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலையை விரைவாக மீட்டு மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புடைய மரகதத்தால் ஆன முருகக் கடவுளின் மூலவர் சிலை திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், இக்கோவில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முத்துச்சுவாமி சித்தரின் கடின உழைப்பாலும், இறையருளாலும் இந்தக் கோவில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், காஞ்சி மகா பெரியவரால் இக்கோவில் “நடுபழனி” என்று சிறப்புப் பெயர் சூட்டப்பட்ட பெருமையையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஆன்மிக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் விலைமதிப்பற்ற சிலை காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் வானதி சீனிவாசன், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்போது வழிபாட்டுத் தலங்களுக்கும் கடவுள் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பல நூற்றாண்டுகள் பழமையான சிலைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு தாயகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவில்களில் உள்ள விலைமதிப்பற்ற சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாதது நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மரகத முருகன் சிலை காணாமல் போனது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி, சிலையை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைவாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் மரகத சிலையை மீட்டு, மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து, கோவில் சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Information that Emerald Murugan idol gone missing from Nadupalani temple BJP leader Vanathi Srinivasan urges speedy recovery


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->