நடு பழனி முருகன் கோவில் கருவறை பூட்டை உடைத்து மரகதச் சிலை திருட்டு...! - தீவிர விசாரணையில் காவல்துறை...!
Emerald idol stolen after breaking lock sanctum sanctorum Nadu Palani Murugan temple Police under intensive investigation
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழமையான முருகன் கோவிலின் கருவறை பூட்டை உடைத்து, சுமார் 2 அடி உயரமுள்ள மரகதத்தால் ஆன மூலவர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலுக்கும், பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கும் இடையில் இக்கோவில் அமைந்துள்ளதால், முருக பக்தர்கள் இதனை “நடுபழனி முருகன் கோவில்” என்று அழைத்து வருகின்றனர்.

இந்த கோவிலின் கருவறையில் மரகதத்தால் செய்யப்பட்ட மூலவர் முருகன் சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கருவறையின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் இருந்த சுமார் 2 அடி உயரம் கொண்ட மரகத முருகன் சிலையை திருடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.கோவிலில் இருந்து விலைமதிப்பற்ற சிலை காணாமல் போனதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், கோவிலை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். கருவறையின் பூட்டு உடைக்கப்பட்ட விதம், சிலை திருடப்பட்ட விதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்ததா, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அப்பகுதியில் யாரேனும் சென்றார்களா என்பது குறித்தும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருடுபோன மரகத முருகன் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மலைக்கோவிலின் கருவறையில் இருந்த விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலை திருடப்பட்ட சம்பவம், பெருங்கருணை கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.காணாமல் போன சிலையை விரைவாக மீட்டு, சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Emerald idol stolen after breaking lock sanctum sanctorum Nadu Palani Murugan temple Police under intensive investigation