இந்தியாவிற்கு என்று தனி விண்வெளி நிலையம் - பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
indian national space day PM Modi
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், விண்வெளி தினம் இளைஞர்களிடையே உற்சாகத்தையும் புதுமைக்கு ஈர்ப்பையும் அதிகரிக்கும் நிகழ்வாக மாறியுள்ளதாக கூறினார்.
கடந்த பதினொன்று ஆண்டுகளில் அரசு விண்வெளித் துறையில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டதாகவும், அதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக மைல்கற்களை எட்டிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரை-கிரையோஜெனிக் என்ஜின்கள், மின்சார உந்துவிசை போன்ற முன்னேற்றமான தொழில்நுட்பங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதைச் சுட்டிக்காட்டினார். விரைவில் ககன்யான் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், எதிர்காலத்தில் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இன்று நேரடியாக மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார். பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் செயற்கைக்கோள் மதிப்பீடுகள் பயன்படுத்தப்படுவது, மீனவர்களுக்கு கடல்சார் பாதுகாப்புத் தகவல்கள் வழங்கப்படுவது, பேரிடர் மேலாண்மை மற்றும் பிரதமர் கதி சக்தி மாஸ்டர் திட்டத்தில் புவிசார் தரவுகள் பயன்படுத்தப்படுவது போன்றவை விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகத்தில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னேற்றங்கள் இந்தியாவின் சாதாரண குடிமக்களின் நாளாந்த வாழ்வை எளிதாக்குகின்றன என்பதையும், எதிர்கால இந்தியா விண்வெளி துறையில் உலகளாவிய முன்னோடியாக அமையும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
indian national space day PM Modi