நானும் ரவுடிதான்’ பாண்டி போல வலம் வர ஆசை...! கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய 19 வயது வாலிபர் புதுச்சேரியில் கைது...!
I am a rowdy I want to crawl like bandy 19 year old youth who threatened public knife arrested Puducherry
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் வரும் பாண்டியைப் போல பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும் என்ற ஆசை 19 வயது வாலிபரை விபரீத செயலுக்கு தள்ளியுள்ளது. கையில் நீளமான கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய அந்த வாலிபரை புதுச்சேரி காவலர்கள் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி ஓதியஞ்சாலை காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே வாலிபர் ஒருவர் கையில் சுமார் 1½ அடி நீளமுள்ள கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் சென்ற பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.கையில் கத்தியை வைத்தபடி, தன்னை ஒரு பெரிய ரவுடியைப் போல காட்டிக்கொண்டு அந்த பகுதியில் அவர் சுற்றித் திரிந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், தூரத்தில் காவலர்கள் வருவதைப் பார்த்ததும் வாலிபரின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. காவலர்களிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து வேகமாக ஓட முயன்றார்.எனினும், அவரை விடாமல் பின்தொடர்ந்த காவலர்கள் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில், அவர் கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற சாரதி என்பதும், அவருக்கு 19 வயது என்பதும் தெரியவந்தது.சாரதியிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தெரிவித்த காரணம் காவலர்களையே அதிர்ச்சியடையச் செய்தது.
தான் ஒரு பெரிய ரவுடியாக வேண்டும் என்றும், தன்னைப் பார்த்தாலே ஊரில் உள்ளவர்கள் பயப்பட வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதற்காகவே கத்தியை கையில் எடுத்துக்கொண்டு சாலையில் சென்ற பொதுமக்களை மிரட்டியதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் ரவுடிகள் பயன்படுத்தும் பாணியைப் பார்த்து, அதுபோன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போல தானும் ரவுடியாக வலம் வரலாம் என்று நினைத்த சாரதிக்கு, இறுதியில் சினிமாவில் வரும் காட்சியைப் போல் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயே காவலர்களின் நடவடிக்கையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
காவலர்கள் அவரை கைது செய்ததுடன், பொதுமக்களை மிரட்ட பயன்படுத்திய சுமார் 1½ அடி நீள கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரிய ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் கத்தியை கையில் எடுத்த இளைஞர், தற்போது சிறையில் நாட்களை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.தனது செயலால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து, தான் செய்தது தவறு என சக கைதிகளிடம் புலம்பி வருவதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
I am a rowdy I want to crawl like bandy 19 year old youth who threatened public knife arrested Puducherry