ஓசூர் அருகே பயங்கர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி!
hosur road accident
ஓசூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெங்களூர்–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பேரண்டப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் மொத்தம் ஐந்து வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதியன.
முதலில் சென்ற மினி லாரி மற்றும் கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணித்த சேலம் பகுதியைச் சேர்ந்த நால்வர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
விசாரணையில், கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்பவர் சமீபத்தில் பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவரை அழைத்துச் செல்ல முகிலன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நின்றது. பின்னர் போலீஸார் அடிபட்ட வாகனங்களை சாலையோரம் நகர்த்தி போக்குவரத்தை மீண்டும் சீராக்கினர்.
மோதல் அதிர்ச்சியில் கார் துண்டு துண்டாக நொறுங்கியதால், உயிரிழந்த நால்வரையும் உடனடியாக மீட்க முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து ஒசூர் போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாகன ஓட்டிகளிடம் இருந்து விளக்கம் பெற்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மந்தமான பனிமூட்டம் மற்றும் அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.