பூந்தமல்லியில் கொடூரம்… 18 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை! - குற்றவாளிக்கு தொடர் ஆயுள்!
Horror Poonamallee 18 year old girl harassement and murdered culprit sentenced life imprisonment
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான பெண், குடும்ப வாழ்வில் ஏற்பட்ட விரிசலால் கணவரை பிரிந்து, தனது இரு பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்க்கையை நடத்தி வந்தார். அந்த சூழலில் நஜீப்தீன் என்ற ராஜூ (40) என்பவருடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் வாழ்க்கைத் துணையெனும் அளவிற்கு வளர்ந்தது.
குழந்தைகளை விட்டுவிட்டு, அவருடன் சென்னை புறநகர் பூந்தமல்லியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.சில காலத்தில் தனது 18 வயது மகளையும் அருகில் அழைத்து வந்து, ஒரே வீட்டில் மூவரும் வசிக்கத் தொடங்கினர்.

ஒரு நாள் வேலைக்குச் செல்லும் போது, மகளை ராஜூவிடம் ஒப்படைத்த தாய், தன் வாழ்க்கையில் நிகழவிருந்த பயங்கர துயரத்தை அறியாமலே வீட்டை விட்டு புறப்பட்டார்.அந்த நேரத்தை மரண வாய்ப்பாக மாற்றிய ராஜூ, சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் தன் கொடூரத்தை மறைக்க, இரக்கமின்றி கழுத்தை நெரித்து கொலை செய்து, அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து தலைமறைவானார்.வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், காயங்களுடன் உயிரற்ற நிலையில் கிடந்த மகளை கண்டதும் அலறி துடித்தார்.
அந்த நொடியில் அந்த வீட்டில் நிகழ்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது.உடனடியாக வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், மும்பையில் மறைந்து கொண்டிருந்த ராஜூவை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் தமிழ் இனியன் வலுவான ஆதாரங்களுடன் வழக்கை முன்னெடுத்தார்.நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜூலியட் புஷ்பா, சாட்சிகள், மருத்துவ அறிக்கைகள், தடயவியல் ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலித்து, குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,பாலியல் பலாத்கார குற்றத்திற்கு ஆயுள் தண்டனை + ரூ.10,000 அபராதம்,கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை + ரூ.10,000 அபராதம்,வன்கொடுமை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை + ரூ.10,000 அபராதம்,நகை மற்றும் பணம் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடும் சிறை + ரூ.5,000 அபராதம் என தொடர் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வெளியானவுடன், ராஜூவை போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, நீதியின் கடுமையான முகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளது.
English Summary
Horror Poonamallee 18 year old girl harassement and murdered culprit sentenced life imprisonment