நண்பர்களுடன் விளையாடியபோது நேர்ந்த கொடூரம்... மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு...!
horrific incident occurred while playing with friends An 11 year old boy died due to electrocution
கோவில்பட்டியில் நண்பர்களுடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 9-வது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் மணிகண்டன் (வயது 11).

அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, வீட்டின் முன்புறச் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மின்கசிவு தடுப்பு குழாயை மணிகண்டன் எதிர்பாராதவிதமாக தொட்டுள்ளான்.அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், மணிகண்டனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவன், மயங்கி தரையில் விழுந்தான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், மணிகண்டனை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் குழாயில் எவ்வாறு மின்கசிவு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
horrific incident occurred while playing with friends An 11 year old boy died due to electrocution