நாமக்கல் அருகே கோர விபத்து...! கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டிய கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!
Horrific accident near Namakkal 3 members same family killed when car lost control and crashed barrier
நாமக்கல் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள மொலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (35).
இவர் தனது தந்தை செல்வராஜ் (60), தாய் காந்திமதி (55) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கி காரில் புறப்பட்டார்.இவர்கள் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி மற்றொரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், நாமக்கல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் தாறுமாறாக சென்ற அந்த கார், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரை தாண்டி மறுபுறம் பாய்ந்தது.அப்போது எதிரே கார்த்திக்குமார் ஓட்டி வந்த கார் மீது அந்த கார் பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது. இரு கார்களும் மோதிய வேகத்தில் பலத்த சேதமடைந்தன.
காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.இந்த கோர விபத்தில் கார்த்திக்குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் காந்திமதி ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பொதுமக்களின் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனிடையே, மற்றொரு காரில் பயணம் செய்த கிசான்கெளடா (19) உள்ளிட்ட 3 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட காவலர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பள்ளப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Horrific accident near Namakkal 3 members same family killed when car lost control and crashed barrier