"காடுவெட்டி குரு"வின் வாழ்க்கை வரலாறு!! யாரும் அறியா சில விஷயங்கள்!!  - Seithipunal
Seithipunal


காடுவெட்டி எனும் கிராமத்தில் பிறந்ததால் "காடுவெட்டி குரு" என்றும், "மாவீரன் குரு" என்றும் அழைக்கப்படும், வன்னியர் சங்கத்தின் நிரந்தர தலைவர் ஜெ.குருநாதன் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பார்ப்போம். 

பிறப்பு:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி என்ற கிராமத்தில், பிப்ரவரி 01, 1961 ஆம் ஆண்டு காடுவெட்டி குரு பிறந்தார். இவரது தந்தை செயராமன் படையாச்சி மற்றும் தாயார் கல்யாணி அம்மாள் ஆகியோர்கள் ஆவார். இவரின் தந்தை செயராமன் படையாச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாவார். 

குடும்பம்: 

இவரது தந்தையார், குரு சிறிய வயதாக இருக்கும் போது எதிரியால் கொள்ளப்படுகிறார். பின்னர் குருவின் குடும்பம் தன் தாயாரின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு செல்கின்றனர். இவர் பள்ளி படிப்பை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (எம். ஏ வரலாறு) பெற்றவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசின் நெருங்கிய உறவினரான லதா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு கனலரசன் என்ற மகனும், விருத்தாம்பிகை என்ற மகளும் உள்ளனர். 

அரசியல்:

இவர் 1986இல் காடுவெட்டியில் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்தார். தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக எம்.கே. ராஜேந்திரன், வீரபோக. மதியழகன் ஆகியோர், பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தலைமையில் குருவை வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பாமகவில் வளர்ந்தார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். வன்னிய குல சத்திரிய இளைஞர்களால் "மாவீரன் குரு" என்றழைக்கப்பட்டார். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எளிமையாக ஓட்டு வீட்டில் வசித்துவந்துள்ளார்.

சிறைவாசம்: 

குரு தன் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக வாழ்வின் இறுதிநாள் வரைப் போராடியுள்ளார். இவர் இரண்டுமுறை குண்டர் சட்டம் பாய்ந்து சிறை சென்றுள்ளார். இந்தியாவிலேயே தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு நபர் காடுவெட்டி குரு தான். ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டமாக அரியலூர் இருந்த போது பெரம்பலூர் கலெக்டர் மக்கள் நிதியை ஒதுக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாக கலெக்டர் ஆபீசை பூட்டி கையில் சாவியுடன் விரைந்தவர்.

பதவிகள்: 

2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றிப் பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

கொள்கைகள்: 

மிகவும் பிற்படுத்த பட்ட சமுதாய மக்களுக்காக கடைசி வரை கல்வி, வேலைவாய்ப்பு பெறுக வேண்டுமென உதவி செய்தவர். இவர் அரியலூர் மாவட்டத்தில் ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்து இரண்டு எதிர் எதிர் துருவங்களாக வாழ்ந்த மக்களை அமைதிப்படுத்தியவர். நாடக காதலை கடுமையாக எதிர்த்ததால் காரணமாக பலரால் சாதிவெறியன் என முத்திரை குத்தப்பட்டவர். இருப்பினும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை அரணாக நின்று காத்தவர் என அரியலூர் மாவட்ட தலித் மக்களால் போற்றப்பட்டவர். தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர் என்பது வரலாறு.

தமிழ்த்தேசிய கொள்கைகள் மீது அதீத ஆர்வம் கொண்டவரின் அலுவலக சந்திப்பு கூடத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இருப்பதை இன்றளவும் காணமுடிகிறது. 

மரணம்:  

நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மே 25, 2018 அன்று இவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானதால், சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு காலமானார். பின்னர் இவரது உடல் தன் சொந்த ஊரான காடுவெட்டியில் அவரது சொந்த நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதி சடங்கில் பல லட்சம் வன்னியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வன்னியர்களின் கருப்பு நாளாக இன்றளவும் பார்க்கப்படுவது அது தான். 

நினைவேந்தல்:

மே 25,2019 ஆம் தேதியான இன்றுடன் காடுவெட்டி குரு இறந்து ஒரு வருடமாகிய நிலையில் இன்று திண்டிவனத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். காடுவெட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சாரைசாரையாக இளைஞர்கள் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் பல இளம்பெண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HISTORY OF KADUVETTI GURU


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->