தனியார் பள்ளிகளின் கட்டண அறிவிப்பு பலகையை எதிர்த்து வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders Tamil Nadu government to respond to the case challenging the fee display boards of private schools
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 5-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இதனையடுத்து, மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது' என வாதிடப்பட்டது.
தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில், 'தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.தண்டபாணி, கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என்றும், தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையை தெளிவுபடுத்தினார்.
அத்துடன், கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாமே எனக் தெரிவித்ததுடன், வழக்கு குறித்து ஜூன் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
English Summary
High Court orders Tamil Nadu government to respond to the case challenging the fee display boards of private schools