''போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராடுவோம்;'' சிஜேபி எச்சரிக்கை..!
CJP warns that we will fight again if the cases against the protesters are not withdrawn
டெல்லி ஜந்தரில் கடந்த 20-ஆம் தேதி சிஜே இயக்கத்தினருடன் இணைந்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது மாணவ போராட்டக்காரர்கள் மீதான பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் யூஜி தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் சிஜேபி வலியுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 25-ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மற்ற இரண்டு கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை அடுத்து, அன்றைய தினமே போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில் பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவை திரும்பப் பெறப்படவில்லை என்றும் கூறி, அதனை சிஜேபி கண்டித்துள்ளது.
இது தொடர்பாக சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற ஒப்பந்தம் முழுமையாக மீறப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் கண்காணிக்கப்படுவதோடு, துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தன்னார்வளர்கள் டெல்லியில் தடுத்து வைக்கப்படுவது குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களை விடுவிக்க வேண்டும். ஒப்பந்தப்படி, டெல்லி காவல் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் காவல் துறை ஆகியவை, போராட்டக்காரர்கள் மீது இனி எந்த வழக்கும் பதியக் கூடாது என்று நாங்கள் கோருகிறோம். இல்லாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
CJP warns that we will fight again if the cases against the protesters are not withdrawn