பள்ளி, கல்லூரிகளில் சாதி, மத விவரங்களைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவு! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் சாதி விவரங்களைச் சேகரிக்கக் கூடாது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது சாதி மற்றும் மத விவரங்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறைகள் பிஞ்சு மனங்களில் சாதிய உணர்வுகளை விதைப்பதோடு, மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் உருவாக்குகின்றன. எனவே, கல்வி நிறுவனங்கள் சாதி, மத விவரங்களைக் கேட்பதற்குத் தடை விதிப்பதுடன், இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது சாதி மற்றும் மத விவரங்களைக் கேட்டு மாணவர்களையோ அல்லது அவர்களின் பெற்றோரையோ கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், அந்த முந்தைய உத்தரவு இந்த வழக்கிற்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இக்கோரிக்கை தொடர்பாகத் தனியாக புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது சாதி, மத அடையாளங்களைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் இந்தத் தெளிவுபடுத்தல், பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court Clarifies Schools and Colleges Cannot Compel Students for Caste and Religion Details


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->