'பட்டா தர்றோம், பணத்தை கொடுங்க'...! ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடி மோசடி...! - சிக்கிய வனத்துறை அதிகாரிகள்...!
We will give you a certificate give me the money 1 crore fraud Jawadu Hill Forest officials caught
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன நிலங்களுக்கு பட்டா பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, மலைவாழ் மக்களிடம் இருந்து ரூ.1 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரில், 3 வனச்சரகர்கள் உள்ளிட்ட 6 வனத்துறை ஊழியர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சில வனத்துறை ஊழியர்கள், அரசுக்கு சொந்தமான வன நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு வகைமாற்றம் செய்து, வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய மலைவாழ் மக்களிடம், பட்டா வாங்கித் தருவதற்காக பல்வேறு கட்டங்களாக பணம் பெற்றதாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.1 கோடி வரை வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.பணம் பெற்றுக் கொண்ட பின்னரும், சம்பந்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாங்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா பெற்றுக்கொள்ளாவிட்டால், அங்கிருந்து வெளியேற்றப்பட நேரிடும் என்று சிலர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் அதிருப்தியடைந்த பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டனர். முதற்கட்ட விசாரணையில், மலைவாழ் மக்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து வனச்சரகர்கள் மணிவண்ணன், ஆனந்தகுமார், வெங்கடேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சரவணன், ஜெயக்குமார், சண்முகம் ஆகிய 6 பேரையும் வனத்துறை நிர்வாகம் இன்று தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மலைவாழ் மக்களின் நிலத்தை பயன்படுத்தி பணம் வசூலித்ததாக எழுந்த இந்த புகார் ஜவ்வாதுமலை பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
We will give you a certificate give me the money 1 crore fraud Jawadu Hill Forest officials caught