செப்டம்பர் 9-ல் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்...! திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அமைச்சர்கள்...!
tvk alliance consultative meeting September 9th Ministers who met Thirumavalavan person and invited him
வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் நேரில் சென்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, தவெக தலைமையிலான கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தமிழக அரசியலில் சமீபத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல், பல்வேறு எதிர்பார்ப்புகளை தகர்த்து புதிய அரசியல் பாதைக்கு வழிவகுத்தது.

மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருந்த தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்த நிலையில், புதிதாக களம் கண்ட த.வெ.க. ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பமாக அமைந்தது. அதேநேரத்தில், அ.தி.மு.க.வும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் பின்னடைவை சந்தித்தது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் கூட்டணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்கு முன்பு ஒரு அணியில் பயணித்த சில கட்சிகள், தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியல் அணியுடன் கைகோர்த்தன. அந்த வகையில், த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு என்ற நிலையை கடந்து, எதிர்கால தேர்தல்களிலும் ஒருங்கிணைந்து செயல்படும் வலுவான அரசியல் கூட்டணியாக இதை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார்.
இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை.
கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் குழுவை அமைப்பது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.
முதல் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நடைபெறும் இந்த சந்திப்பு, கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதில் திருமாவளவன் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு திருமாவளவனை சந்தித்த அவர்கள், 9-ந்தேதி நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகள், கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான அரசியல் வியூகங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தின் மீது தமிழக அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.
English Summary
tvk alliance consultative meeting September 9th Ministers who met Thirumavalavan person and invited him