வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுலானா தகுதிநீக்கம்...! 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை...! - தேர்தல் ஆணையம்
Former Velachery MLA Asan Maulana disqualified Banned from contesting elections 3 years
தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத விவகாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட அவருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அந்த தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

இதனை விளம்பரப்படுத்தும் வகையில் 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.33 லட்சம் தொகை, தேர்தல் செலவு கணக்கில் முறையாக பதிவு செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக 2021-ம் ஆண்டிலேயே அசன் மவுலானாவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு அவர் பதிலளித்திருந்த நிலையில், தேர்தல் செலவு கணக்கை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, அவரை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை கேட்டு 2023-ம் ஆண்டிலும் தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.இதற்கும் அசன் மவுலானா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் அவருக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில், 2021-ம் ஆண்டு தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாதது தொடர்பான விசாரணையின் முடிவில், அசன் மவுலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தல் தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிட அசன் மவுலானா தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும், தேர்தலில் வேட்பாளருக்கான அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் செலவு வரம்பை விட அதிகமாக அசன் மவுலானா செலவு செய்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற விசாரணைகளில் அவர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.இதனால், தேர்தல் செலவு கணக்கு தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்றாத விவகாரத்தில் அசன் மவுலானாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Former Velachery MLA Asan Maulana disqualified Banned from contesting elections 3 years